புதுடெல்லி: இந்தியாவில் 2,597 மாநிலக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவாகி உள்ளன.
செயல்படும் நிலையில் இருந்து வந்தாலும் அவை அங்கீகரிக்கப்படாதவை. அவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 200 கட்சிகளும் அடங்கும்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பட்டியல் அப்போதைக்கு அப்போது புதுப்பிக்கப்படுவது வழமை. அதன்படி அந்த ஆணையம் இப்போதைய பட்டியலைத் தயாரித்துள்ளது.
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய நான்கு கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்.
தமிழ்நாட்டில் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத 200 கட்சிகள் இருக்கின்றன. நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2,597 என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்யப்பட்டு ஆனால் முறையாகச் செயல்படாத மாநில கட்சிகள் 218. பட்டியலில் இருந்து 282 கட்சிகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் 15 கட்சிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
திமுக, அதிமுக, என்.ஆர் காங்கிரஸ் ஆகியவை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக பதியப்பட்டு உள்ளன.
இதனிடையே, ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் அனாமதேய தரப்புகளிடம் இருந்து 27 மாநில கட்சிகள் தங்களின் மொத்த வருவாயில் ரூ.887.551 கோடியை (76.14%) பெற்றிருக்கின்றன.
தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்த விவரங்களில் இருந்து இது தெரிய வந்திருப்பதாகச் சங்கம் கூறியது.
அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கும் மேற்பட்ட கொடைகள் அனைத்தையும் பற்றி தனது தேர்தல் ஆணைய ஆவணங்களில் வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகதான் ஆக அதிக அனாமதேய வருவாய் ரூ.306.02 கோடியைப் பெற்றுள்ளது.

