செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
933c1568-ea79-4fbe-a160-f7f43623b5ed
-

மோடி, ராகுல் அமெரிக்கா பயணம்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை மாதம் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக இந்த மாதம் 31ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், தொழில் முனைவோரை ராகுல் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழை தாமதம்

திருவனந்தபுரம்: இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்.

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே மாதம் 29ஆம் தேதியே தொடங்கியது. ஆனால் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஒரு வாரம் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

77 வகை மாம்பழக் கண்காட்சி

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பழ ஆய்வு நிலையத்தில் 4,000 மா மரங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தப் பருவத்தில் 77 வகை மாம்பழங்கள் பழுத்து மணம் வீசுகின்றன. அங்கு மாம்பழக் கண்காட்சி நடக்கிறது. அஸாம்-உஸ்-சமர் என்ற உயர் ரக மாம்பழம் ஒரு கிலோ ரூ.600க்கும் ஹிமாயத் ரகம் ஒரு கிலோ ரூ.250க்கும் விற்கப்படுகிறது. படம்: இந்திய ஊடகம்

சாலை விபத்துகளில் 14 பேர் பலி

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தெலுங்கானாவிலும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் ஃபேத்பூர் என்ற நகருக்கு அருகே இருக்கும் ஜெகனாபாத் என்ற ஊரில் ஆட்டோவும் பால் வாகனமும் மோதிக்கொண்டதில் ஒன்பது பேர் மாண்டனர்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ, லாரியில் மோதியதில் அதே இடத்திலேயே ஐவர் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி 9வது ஆண்டு விழா

புதுடெல்லி: பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு முதல் முறையாகப் பிரதமர் பதவி ஏற்றார். அவர் ஆட்சி பொறுப்பேற்று வருகிற 30ஆம் தேதியுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை மே 30ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதிவரை ஒருமாத காலம் பிரம்மாண்டமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

அதானி விவகாரம்: மேலும் அவகாசம்

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனப் பங்குகள் சரிந்தன. அது பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, அதானி குழும நிறுவனங்கள் பற்றி விசாரணை நடத்த செபி அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் மேலும் மூன்று மாத அவகாசம் அளித்தது.