கோல்கத்தா: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை, தனித்தே போட்டி என்று கூறிவந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கிடையாது என்றும் பாஜகவையும் காங்கிரஸ் கட்சியையும் சம தூரத்தில் வைத்திருப்பதாகவும் மம்தா கூறி வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க பல்வேறு நிபந்தனைகளையும் அவர் விதித்திருந்தார்.
மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மம்தா கூறி வந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு தமது நிபந்தனைகளைத் தளர்த்திக்கொண்டுள்ள அவர், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கத் தயார் என்று கூறியுள்ளார். தங்களுக்கும் இதேபோல் காங்கிரஸ் ஆதரவு தரவேண்டும் என்று மம்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் வரவேற்றுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பவாதத்தை ஏற்கமுடியாது. மம்தா தனது நிலைப்பாட்டை தளர்த்தினாலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யுடன் காங்கிரஸ் போட்டியிடும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

