இந்தூர்: தேநீர்க் கடை மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.150 கோடி அளவுக்கு சம்பாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர் அனுபவ் தூபே, ஆனந்த் நாயக் என்ற இளையர்கள். இவர்கள் பற்றிய செய்தி பலரையும் புருவம் உயர்த்தி வியக்க வைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் நாயக். தொழில் தொடங்க விரும்பிய இவர், அனுபவ் தூபே என்ற நண்பரின் உதவியை நாடியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்த அனுபவ் தூபே தனது படிப்பை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு இந்தூர் வந்துள்ளார்.
இருவரும் தங்களிடமிருந்த மூன்று லட்சத்தை முதலீடாகக் கொண்டு 'சாய் சுட்டா பார்' என்ற தேநீர்க் கடையைத் திறந்துள்ளனர்.
குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இக்கடையில் கண்ணா டிக் கோப்பைகளுக்குப் பதிலாக மண் குடுவையில் மட்டுமே தேநீர் வகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
கடந்த 2016ல் தொடங்கப்பட்ட இந்த தேநீர்க் கடை, தற்போது நாடு முழுவதும் 195 நகரங்களில் 400க்கும் அதிகமான கிளைகளுடன் செயல் பட்டு வருகிறது.
முதல் கடையில் கிடைத்த லாபத்தைக் கொண்டு அடுத்தடுத்த கிளைகளைத் தொடங்கிய இளைஞர்கள், தற்போது ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தங்களது புதிய கிளைகளில் ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.

