அமைச்சர் பதவியைப் பிடிப்பதில் காங்கிரசுக்குள் கடும் போட்டி
புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான புதிய ஆட்சி அமைகிறது. இதையடுத்து, புதிய அமைச்சரவை குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசிக்க புதிய முதல்வர், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் டெல்லி விரைந்துள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரவையில் இடம்பிடிக்க காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
அனைவரும் விட்டுக்கொடுத்துச் செயல்பட வேண்டிய தருணம் இது என கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது காங்கிரஸ். புதிய எம்எல்ஏக்களில் 30 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார், யாரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க மூத்த தலைவர்களான சித்தராமையாவும் சிவகுமாரும் நேற்று டெல்லி சென்றடைந்தனர்.
அங்கு கட்சியின் மூத்த தலைவர்களுடனும் கட்சித் தலைமையுடனும் அவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
மேலும், புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு இருவரும் நேரில் சென்று அழைப்பு விடுத்ததாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதேபோல், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். பாஜவுக்கு எதிராகச் செயல்படக் கூடிய பிரமுகர்கள் பலர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கக்கூடும்.
இதற்கிடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள், பதவிக்கு ஆசைப்படாமல் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.
"அனைவரும் ஒரு கட்டத்தில் தியாகம் செய்ய வேண்டும். அனைத்தும் சிறப்பாகவே நடந்திருக்கிறது," என்று கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இவர் புதிய அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வராக இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனினும், அவரை கட்சி மேலிடம் தற்காலிகமாக சமாதானப்படுத்தி உள்ளது.

