புதுடெல்லி: மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள இணையம் மூலம் விளையாடப்படும் பப்ஜி விளையாட்டு பல்வேறு மாற்றங்களுடன் இந்தியாவில் மீண்டும் அறிமுகமாக உள்ளது.
மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த விளையாட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவைச் சேர்ந்த இணைய விளையாட்டுகளை உருவாக்கும் கிராப்டன் நிறுவனத்துக்குச் சொந்தமான பப்ஜி, வன்முறைகள் நிறைந்த விளையாட்டாகும்.
குறுகிய காலத்திலேயே ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த நிலையில், 2020ஆம் ஆண்டு இந்திய, சீன எல்லைப் பிரச்சினை காரணமாக சீன கைப்பேசி, இணைய செயலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையில் பப்ஜி விளையாட்டும் சிக்கியது. கிராப்டன் நிறுவனம் சீனாவின் டென்சென்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் சில மாற்றங்களுடன் பிஜிஎம்ஐ (பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா) என்ற பெயரில் கிராப்டன் நிறுவனம் இந்த விளையாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றாலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தச் செயலிக்கும் இந்திய அரசு தடை விதித்தது.
இப்போது மூன்றாவது முறையாக இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிஜிஎம்ஐ விளையாட்டை கிராப்டன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் இதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

