ஸ்ரீநகர்: ஜி20 அமைப்பிற்கு இந்தியா இவ்வாண்டு தலைமை தாங்குகிறது. அதன்படி, ஜி20 உச்சநிலை மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சுற்றுலாத் துறை தொடர்பான ஜி20 மாநாடு நாளை ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது.
காஷ்மீரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம், இந்திய தேசிய பாதுகாப்புப் படை, கடற்படையின் சிறப்பு மின்னல் படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல்துறைப் படையினர், ஷாஷ்த்ரா சீமா பெல் படையினர் (இந்தோ-நேப்பாளம், இந்தோ-பூட்டான் எல்லைப் பாதுகாப்பு படையினர்), காஷ்மீர் காவல்துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தியது.
பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபுரா, அனந்த்நாக், சோபியான், பூஞ்ச், குப்வாரா என ஏழு மாவட்டங்களில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஸ்ரீநகரில் நடைபெற இருக்கும் உச்சநிலை மாநாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற இலக்குடன் உயர் விழிப்புநிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள டால் ஏரியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட இந்திய மின்னல் படை வீரர்கள்.
படம்: இபிஏ

