புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்றக் கட்டடம் ஏறத்தாழ 96 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டடத்தை இடிக்காமல் பழைய கட்டடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் 'சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டும் பணிகள் 2019ஆம் ஆண்டில் தொடங்கின.
2021, 2022ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டபோதும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.
ரூ. 20,000 கோடி மதிப்பிலான 'சென்ட்ரல் விஸ்டா' கட்டடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது.
தற்போது பணிகள் முடிந்த நிலையில், இம்மாதம் 28ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலங்களவையில் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர வசதி உள்ளது. அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
புதிய கட்டடத்தில் பிரம்மாண்டமான அரசியல் சட்ட மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான பெரிய அறைகள், உணவு அருந்தும் பகுதி, பெரிய வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.
திறப்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளமாட்டார்
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் அமெரிக்காவுக்குப் பத்து நாள் பயணமாக இம்மாதம் 31ஆம் தேதி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் மூன்று நாள்களுக்கு முன்னதாக இம்மாதம் 28ஆம் தேதியன்று ராகுல் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

