எதிர்வரும் 2024ல் இந்தியாவில் இம்மாநாட்டை நடத்த நான்கு தலைவர்களும் இணக்கம்
ஹிரோஷிமா: உலக நன்மை, மக்கள் நலன், செழிப்பு, அமைதிக் கான முயற்சிகளை முன்னெ டுப்பதில் 'குவாட்' (நாற்கர) கூட்டமைப்பு தொடர்ந்து அக்கறை காட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 'குவாட்' மாநாட்டில், பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஆஸ்திரேலியப் பிரதமா் ஆன்டனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பங்கேற்றனா்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வதில் முக்கிய மையமாக 'குவாட்' கூட்டமைப்பு மாறியுள்ளது," எனக் குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் பாதுகாப்பு இந்த ஒட்டுமொத்த உலகத்துக்குமே மிகவும் முக்கியமானது என்று கூறிய பிரதமர் மோடி, மக்கள் நலன், அனைத்துலக வளர்ச்சி, அமைதிக்கு குவாட் அமைப்பு தொடர்ந்து பாடுபடும் என்றார்.
அடுத்த 2024ல் 'குவாட்' மாநாட்டை இந்தியாவில் நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்கு மற்ற தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தலைவா்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளின் இறையாண்மை, வட்டார ஒருமைப்பாட்டை மதித்து நடக்கவேண்டியது அவசியம். இந்தோ-பசிபிக் வட்டாரத்தை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழச்செய்ய 'குவாட்' மீண்டும் உறுதி ஏற்ப தாகவும் பயங்கரவாதத்தின் அனைத்து கூறுகளையும் குவாட் கூட்டமைப்பு எதிர்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

