புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று முன்தினம் இரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்று கூறப்படுகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
அதேபோல், டெல்லியில் உள்ள சந்தைப் பகுதிகளுக்குச் சென்று மக்களோடு இணைந்து சாலையோர உணவு சாப்பிட்டது, டெல்லி பல்கலைக்கழக விடுதியில் மாணவர்களுடன் இணைந்து உரையாடியது என அண்மையகாலமாக அடிக்கடி அனைத்துத்தரப்பு மக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு காரில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, திடீரென்று டெல்லி - சத்தீஸ்கர் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி, சாலையோர உணவகங்களில் நின்றிருந்த லாரி ஓட்டுநர்களுடன் உரையாடினார். அதன்பிறகு, யாரும் எதிர்பாராதவிதமாக தான் பயணம் செய்த காரை தவிர்த்து முர்தலில் இருந்து அம்பலா வரை லாரியின் முன்பகுதியில் லாரி ஓட்டுநருடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, லாரி ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து நீண்ட நேரம் உரையாடினார். பின்னர் அவர்களது லாரியில் ஏறினார்.
ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் இருந்து சண்டிகர் வரை காரில் பயணித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு அவர்கள் தங்கும் இடத்தையும் பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வெளியான நிலையில் சமூக வலைத்தளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது.
ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பின்னால் ராகுல் காந்தி எப்போதும் இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் தொழில் அதிபர் அதானியுடன் பிரதமர் நரேந்திரமோடி மோடி இருக்கும் புகைப்படத்தையும், லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் உரையாடும் புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரும் மகிழ்ச்சியில் உள்ள ராகுல் காந்தி, திடீரென்று லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி லாரி ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஹரியானாவில் லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி, லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்டு அறிந்துகொண்டார்.
படம்: ஊடகம்

