பாஜக அரசின் அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவு
புதுடெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சராக இருந்து வருகிறார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வரைவிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது.
அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
பதவியை மாற்றுவது மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய முதல்வருக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்குப் பெரிய சறுக்கலாக அமைந்தது.
இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர இருப்பதாக தெரிகிறது. இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் மம்தா பானர்ஜியின் உதவியை நாட இருக்கிறார். இதன் முதற்கட்டமாக நேற்று முன்தினம் கோல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.
டெல்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு நீடித்து வருகிறது.
டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசரச் சட்டம், உச்ச நீதிமன்ற அவமதிப்பு என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து கூறிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை மாற்ற மத்திய அரசாங்கம் கொண்டு வரும் இந்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாது," என்று பேசியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து கலந்தாலோசிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மாபெரும் மாநாட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

