புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு இனி தரச்சான்றிதழ் தேவை என்று அந்நாடு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் காம்பியாவில் கிட்டத்தட்ட 70 குழந்தைகளும் உயிரிழந்ததாக அந்நாடுகள் கூறியுள்ளன. இதை உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உறுதிசெய்தது.
காம்பியாவில் குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக வெளிவந்த செய்திகளையடுத்து, இந்த மருந்துகள் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
இந்த மருந்துகளில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான மாசுத்தன்மை, டைஎதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகிய இரண்டும் உள்ளன என்று ஆய்வகப் பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது.
இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்த நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு தரநிலையைக் கடைப்பிடிப்பதாக கூறியது.
ஆனால், இந்த நிறுவனம் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும் கடைபிடிக்காததற்காகவும் 2011, 2018, 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் இனி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ஜூன் 1 2023 முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கோல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்துத் தயாரிப்புகளை முறையாக மத்திய அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

