செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b85dc129-4643-4b99-afc8-5100d88575cb
-

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்

பதவிக்கு காதர் வேட்புமனு தாக்கல்

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் பாஜக ஆட்சியின்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த யு.டி. காதர், சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். புதிய சட்டப்பேரவையின் சபாநாயகர் பதவிக்கு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த யு.டி.காதரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வழக்கமாக ஆளும் கட்சி நிறுத்தும் வேட்பாளரே சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார் என்பதால் யு.டி.காதர் சபாநாயகராவது உறுதியாகி விட்டது.

மணமேடையில் ஓடிப்போன

மணமகனை துரத்திப் பிடித்த பெண்

பெரோலி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரோலி மாவட்டத்தில் காதலர்கள் இருவரையும் சேர்த்துவைக்க இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் பேசி முடித்து மணமேடை வரை வந்த பின்பு, தாலி கட்டப்போகும் நேரம் பார்த்து மாப்பிள்ளை, திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்தச் சம்பவத்தில் மணப்பெண், மாப்பிள்ளைக்கு பலமுறை கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். ஆனால், மாப்பிள்ளையோ தட்டிக்கழிப்பதைப் போல் சாக்குப்போக்குக் கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த மணப்பெண்ணோ, பெரோலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்று மாப்பிள்ளையைத் தேடினார். மாப்பிள்ளையோ வேறு ஊருக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்தார். மாப்பிள்ளையிடம் சண்டைபோட்டு அவரை இழுத்துவந்து மணமேடையில் உட்கார வைத்துத் தாலிகட்டச் சொன்னாராம் அந்த மணமகள்.

ஜி-20 நாடுகளுடன் இணைந்து

இந்தியா செயல்படும்

ஸ்ரீநகர்: ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி-20 உறுப்பு நாடுகள், உலகப் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, "நீடித்த நிலையான வளர்ச்சியை உலக மக்களும் நாமும் பயன்பெற வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஜி20 நாடுகளுடனும் அனைத்துலக அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ள இந்தியாவின் சுற்றுலாத்துறை உறுதி பூண்டிருக்கிறது," என தெரிவித்தார். பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய விவகாரங்களில் அனைத்துலகப் பங்களிப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது கூறினார். மாநாட்டில் பேசிய ஆளுநர் மனோஜ் சின்ஹா, "அறிவின் மையமாக, ஞானத்தின் மையமாக எப்போதும் இருக்கும் நிலப்பகுதி ஜம்மு காஷ்மீர். அண்டை நாட்டின் மூலம் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதத்தால் இந்த மாநிலம் கடந்த 30 ஆண்டுகளாக அமைதியை இழந்து தவித்தது," என்றார்.