சங்குரூர்: கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசாங்க வேலை கொடுப்பதற்கு ரூ.2 கோடி லஞ்சம் கேட்ட சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. அந்த வீரரிடம் லஞ்சம் கேட்டவர் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு நெருங்கிய உறவினர் என்று இப்போதைய முதல்வர் பகவந்த் மான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தின் திர்பா மற்றும் சீமா ஆகிய பகுதிகளில் அரசு அலுவலக வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் பகவந்த்மான் நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய முதல்வர் பகவந்த்மான், "இரண்டு நாள்களுக்கு முன் தரம்சாலா சென்றிருந்தேன். அப்போது பஞ்சாப் அணியில் விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரரைச் சந்தித்தேன்.
"அவர் பஞ்சாப் தேர்வாணையம், அதிகாரி பணிகளுக்கு நடத்திய போட்டித் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அவரால் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
"தேசியளவில் விளையாடிய வீரர் என்பதால், விளையாட்டு வீரருக்கான இட ஒதுக்கீட்டில் வேலைபெற முடிவு செய்தார்.
"முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ஆட்சிக் காலத்தில், அவருக்கு வேலை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அமரிந்தர் சிங் பதவி விலகலுக்கு சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார்.
"இதையடுத்து அந்த விளையாட்டு வீரர் சரண்ஜித் சிங் சன்னியைச் சந்தித்து வேலை கேட்டுள்ளார். அவர் தனது நெருங்கிய உறவினரான பூபேந்தர் சிங் ஹனியை பார்க்கும்படி கூறியுள்ளார். பூபேந்தர் சிங் ஹனி ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார்.
"ஆனால், எனது அரசு 29,000க்கும் மேற்பட்ட அரசு வேலைகளை மெரிட் அடிப்படையில் வழங்கியுள்ளது. கோதுமைக்கான விலை மதிப்பை மத்திய அரசு குறைப்பது கண்டனத்துக்குரியது. தேசிய உணவுக் கிடங்குகளை நிரப்ப கோதுமை மற்றும் அரிசியை மத்திய அரசு கோரும்போது, விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட விலைக் குறைப்பு வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். பஞ்சாப் விவசாயிகளிடம் மத்திய அரசு வேறுபாட்டுடன் நடந்துகொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதுபோன்ற மோசமான முடிவுகளால், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் கடுமையாகப் பாதிக்கின்றன," என்றார் அவர்.

