நிலையத்தைத் தவறவிட்ட ரயில்
1 கி.மீ. பின்னோக்கி வந்தது
கொச்சி: நிற்கவேண்டிய ரயில் நிலையத்தைத் தவறவிட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் பின்னோக்கி நகர்ந்து வந்து நிலையத்தை அடைந்தது ஒரு பயணிகள் ரயில். இந்த வினோதச் சம்பவம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தின் செரியநாடு என்ற ரயில் நிலையத்தில்தான் நடந்தது. திருவனந்தபுரம் ஷோரனூர் இடையே வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் ஷோரனூர் நோக்கிச் செல்லும்போதுதான் ரயில், தான் நிற்கவேண்டிய நிலையத்தைத் தவறவிட்டது. அதனால் இறங்கவேண்டிய பயணிகளும் ரயிலில் ஏறவேண்டிய பயணிகளும் குழப்பம் அடைந்தனர். சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர், மெல்ல மெல்ல பின்னோக்கி ரயிலை நகர்த்தி நிலையத்திற்குக் கொண்டு வந்து பயணிகளின் குழப்பத்தைப் போக்கினார்.
சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் காஷ்மீர் இடம்பெறும்
காஷ்மீர்: உலக நாடுகளின் சுற்றுலாத்தலங்கள் வரிசையில் முதல் 50 இடங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் இடம்பிடிக்கும் என்று காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் தெரிவித்தார். பனிச்சிகரங்கள், தெளிந்த ஏரிகள், பசுமை கொஞ்சும் நிலப்பரப்புகள் போன்றவற்றை காஷ்மீர் ஒருங்கே பெற்றுள்ளது. அந்த அழகைக் காண கடந்த ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக
1.80 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வருகை மேற்கொண்டனர். உலகம் முழுதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பசுமைச் சுற்றுலாவை மேம்படுத்த 300 சுற்றுலாத் தலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது என ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
அதிக கடன் வாங்கிய முதல்வர் என விமர்சித்த ஆசிரியர் நீக்கம்
பெங்களூரு: "கர்நாடக மாநில வரலாற்றில், அதிகளவு கடன் வாங்கிய முதல்வர் என்றால் அது சித்தராமையாதான். இருப்பினும், இலவசத் திட்டங்களை அவர் தாராளமாக அறிவித்துக்கொண்டே இருக்கிறார். இதுபோன்ற தவறான நிதிக்கொள்கை காரணமாக அரசாங்கத்தின் கடன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது," என்று பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது ஃபேஸ்புக் பதிவு சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. இருப்பினும் அரசு ஊழியர்களுக்கான விதிமுறையை மீறியதாக பள்ளி அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது.
மணிப்பூரில் பதற்றம் தொடர்கிறது
மணிப்பூர்: மணிப்பூரின் தலைநகரான இம்பாலாவில் 3.5.2023 தேதியன்று பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது. இப்போது மீண்டும் புதிய வன்முறைச் சம்பவங்களால் மணிப்பூரில் பதற்றம் நீடிக்கிறது. அங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கும் தொடர்வதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியினத் தகுதி அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு அங்குள்ள நாகா, குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

