உறவோ, வீடோ, சொத்தோ, சுகமோ எதுவுமே கிடையாது. எங்களுக்கு நாங்களே துணை. நாளும் 20 கிலோமீட்டர் நடந்து பிளாஸ்டிக் பொருள்களைப் பொறுக்கி விற்றுப்பிழைக்கும் எங்களுக்கு உழைப்பே மூலதனம் என்கிறார்கள் சுப்பிரமணியன்-புஷ்பவள்ளி தம்பதியர்.
வயது என்ன என்பதுகூடத் தெரியாமல் உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. சுப்பிரமணியன்-புஷ்பவள்ளி என்ற இந்தத் தம்பதியருக்கு அவர்களின் வயது சரியாகத் தெரியவில்லை; நேரம் காலமும் தெரியவில்லை.
சொத்தில்லை, சொந்தமில்லை, கடனில்லை, கவலையும் இல்லை.
இந்தத் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தும் அவர்கள் திருமணம் முடித்து பெற்றோரைக் கைவிட்டுவிட்டார்கள். ஒரு குளத்தங்கரை அருகே சிறிய இடத்தை பஞ்சாயத்து நிர்வாகம் இவர்கள் குடியிருக்க கொடுத்து இருக்கிறது.
இவர்களுக்குப் பிறகு அந்த இடத்தை நிர்வாகமே எடுத்துக்கொள்ளும்.
படுதா, தார்பாய், சுவரொட்டி, துணிமணிகளைக் கொண்டு மூடப்பட்டு இருக்கும் அந்த வீட்டில்தான் இத்தம்பதியர் குடியிருக்கிறார்கள். வீட்டில் மின்சாரம் கிடையாது. தண்ணீர் கிடையாது. வீட்டிற்குக் கதவும் கிடையாது.
இத்தம்பதியரை மாப்படுகை என்ற ஊரில் ஒரு பழைய இரும்புக் கடையில் பார்த்தேன். அங்கு பழைய பிளாஸ்டிக் பொருள்கள், பீர் போத்தல்களை இவர்கள் எடைக்குக் கடைக்காரரிடம் விற்றுக்கொண்டு இருந்தார்கள்.
"எங்களிடம் மூன்று சக்கர சைக்கிள் வண்டி ஒன்று இருக்கிறது. முதல் நாள் உணவைக் கையில் எடுத்துக்கொண்டு சூரியன் வந்தவுடன் வண்டியைத் தள்ளிக்கொண்டு கிளம்பிவிடுவோம்," என்று சொன்ன திருவாட்டி புஷ்பவள்ளியிடம் எத்தனை மணிக்குக் கிளம்புவீர்கள் என்று கேட்டபோது மணியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார்.
"எங்கள் வீடுள்ள சித்தர்காடு என்ற ஊரில் இருந்து கிளம்பி மயிலாடுதுறை நகரை நோக்கிச் சந்துபொந்துகள் வழியாக, காவிரி ஆற்றங்கரை ஓரமாகச் சென்று பிளாஸ்டிக் பொருள்களைப் பொறுக்குவோம்.
"பொருள்கள் சேர சேர வண்டியில் அள்ளிப் போட்டுக்கொள்வோம். உயிரைப் பணயம் வைத்துத்தான் பாடுபடுகிறோம். பிளாஸ்டிக் பொருள்கள் கிடக்கும் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் எல்லாம் நல்ல பாம்புகள், பூச்சிகள் திரியும்," என்றார் திரு சுப்பிரமணியன்.
"நடுவே எங்கேயாவது மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவோம்; டீக்கடையில் டீ வாங்கிக் குடிப்போம். சேகரமாகும் பொருள்களோடு மாப்படுகையில் இருக்கக்கூடிய இந்தப் பழைய இரும்புக் கடையில் எடைக்குப் போடுவோம்," என்று கூறிய திரு சுப்பிரமணியன், பிளாஸ்டிக் பொருள்களை கிலோ 20 ரூபாய்க்குப் போட்டு நாளுக்குச் சராசரியாக ரூ.400 சம்பாதிப்போம் என்றார்.
"எங்களுக்கு குடும்ப அட்டை இருக்கிறது. போதிய அளவுக்கு எங்களுக்கு அரிசி கிடைத்துவிடும். வாரம் ஒருமுறை ஒரு லிட்டர் டீசல் வாங்கி வீட்டில் இரண்டு விளக்கு எரிய வைத்துக்கொள்வோம்.
"வழியில் பிளாஸ்டிக் பொருளுடன் மரக்கட்டைகளையும் பொறுக்கி வருவோம். அவற்றை விறகாகச் சமையலுக்கு வைத்துக்கொள்வோம். இப்படித்தான் எங்கள் காலம் ஓடுகிறது," என்று என்னிடம் திருவாட்டி புஷ்பவள்ளி கூறியதை ஆமோதித்த திரு சுப்பிரமணியன், தங்கள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்றார்.
"ஒரு பைசா கடனில்லை, கவலையில்லை. என் மனைவிக்கு நான்தான் துணை. எனக்கு அவள்தான் துணை, " என்றார் அவர்.
தம் கணவர் கூறியதைக் கேட்ட திருவாட்டி புஷ்பவள்ளி, "எங்களுக்கு வாயும் வயிறும் வெவ்வேறாக இருப்பதால்தான் நாங்கள் இருவரும் தனித்தனியாகச் சாப்பிடுகிறோம். இல்லை என்றால் அவர் சாப்பிட்டால் எனக்கு வயிறு நிரம்பிவிடும். அல்லது நான் சாப்பிட்டால் அவருக்கு வயிறு நிரம்பிவிடும்," என்றார்.
"மழைக்காலத்திலும் சில பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கச் செல்வோம். உடம்பு சரியில்லை என்றால் இருக்கவே இருக்கிறது அரசு மருத்துவமனை. அங்கு சென்று மருந்து வாங்கி வருவோம்," என்று திரு சுப்பிரமணியனும் அவருடைய மனைவியும் மாறி மாறிக் கூறினர்.
வாழ்க்கையில் எது இருந்து என்ன, எது இல்லை என்றால் என்ன? நல்ல வாழ்க்கைத்துணை, நல்ல உடல் நலம், மனநிறைவு, மன மகிழ்ச்சி நாலும் இருந்தால் பதினாறும் பெற்ற பெருவாழ்வுதான் என்ற சிந்தனை இந்தத் தம்பதியைக் கண்டதும் என் மனத்தில் உதித்தது.

