புதுடெல்லி: ஐம்பது குழந்தை களுக்கு மேல் திருடி நான்கு மாநிலங்களில் விற்பனை செய்த பத்து பேர் கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை முறியடித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியின் பேலுபூரில் இம்மாதம் 14ஆம் தேதி நான்கு வயது ஆண் குழந்தை காணாமல் போனது.
சாலையோரம் வசிக்கும் குடும்பத்தினர் இரவில் உறங்கும்போது குழந்தை திருடப்பட்டது.
குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர் பலநாள் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வாரணாசி குற்றப் பிரிவு உதவி ஆணையரான (ஏசிபி) சரவணன் எனும் தமிழர் நேரடி விசாரணையில் இறங்கினார்.
வாரணாசி நகர சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அவர் ஆராய்ந்தார்.
இதில், திருடப்பட்ட குழந்தையை காரில் கொண்டுசென்ற ஓட்டுநர் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 'ஷிக்கா' எனும் பெண் தலைமையில் பெரிய திருட்டுக் கும்பல் செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து ஏசிபி சரவணன் தலைமையிலான சிறப்புப் படை புலனாய்வில் இறங்கியது.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தக் குழு விசாரணை நடத்தியது. இதன் முடிவில் குழந்தைகளைக் கடத்தி நான்கு மாநிலங்களில் விற்பனை செய்யும் கும்பல் சிக்கியது. மூன்று பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் சுமார் 50 குழந்தைகளை கடத்தி 4 மாநிலங்களில் விற்பனை செய்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்க்கண்டின் ஒரு வீட்டில் மறைந்திருந்த இக்கும்பலின் தலைவி ஷிக்காவும் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து வாரணாசியில் திருடப்பட்ட மூன்று கைக்குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
"திருடப்பட்ட குழந்தைகள் ரூ. 2 லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை குழந்தை இல்லாதவர் களுக்கு விற்கப்பட்டுள்ளது," என்று 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரி சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி யான டி.சரவணனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.