பட்டாசு ஆலை தீவிபத்து: மன்னிப்பு கேட்டார் மம்தா பானர்ஜி
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா மெதினிபூர் மாவட்டம் எக்ரா பகுதியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் கடந்த மே 16ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, ''எக்ரா பகுதி வெடிவிபத்துச் சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சம்பவம் குறித்த ஆய்வின் முடிவுகள் கிடைத்தவுடன் பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்,'' என்றார்.
மணிப்பூரில் ராணுவத் தளபதி ஆய்வு
இம்பால்: மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் குறித்து ஆய்வுசெய்ய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று முன்தினம் இம்பால் சென்றுள்ளார். அங்கு பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டு நிலவரத்தை அறிந்துகொண்ட தளபதி மனோஜ், சனிக்கிழமை தலைநகர் இம்பால் வந்தடைந்தார்.
நேற்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே, முதல்வர் பிரேன் சிங் ஆகியோரை மனோஜ் பாண்டே சந்தித்துப் பேசினார். மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் தகுதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர்.
பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு
மும்பை: கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரைகுறையாக ஆடையணிந்து நாகரிகமற்ற முறையில் வருவதைத் தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த அம்மாநிலத்தின் கோவில் கூட்டமைப்புச் சங்கம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக நாக்பூரைச் சேர்ந்த தாந்தோலி என்னும் பகுதியில் கோபால கிருஷ்ணன் கோவில், பெலோரியில் உள்ள சங்கத் மோச்சன் ஐந்துமுக அனுமன் கோயில் கானோலி பாராவின் பிரகஸ்பதி கோவில் மற்றும் ஹில்டாப் என்னும் இடத்தில் உள்ள துர்கா மாதா ஆகிய கோவில்களில் இந்தக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக உஸ்மனாபாத் மாவட்டத்தின் துல்ஜா பவானி கோயிலில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரே நாளில் அந்தக் கட்டுப்பாடுகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.
ரயிலில் கறுப்புப் பணம் மீட்பு
திருவனந்தபுரம்: கன்னியாகுமாரியில் புனே-வுக்குப் பயணம் செய்த ஒரு ரயில் பயணியிடம் இருந்து ரூ.17 லட்சம் கறுப்புப் பணத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட ஒருவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவரது இடுப்பில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டம் ஈராற்று பேட்டையை சேர்ந்த 52 வயது முகமது ஹாஷிம் என்பதும், சேலத்தில் இருந்து அங்கமாலிக்குப் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.

