பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு வலியுறுத்து
புதுடெல்லி: 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு மாநிலங்களின் பங்கு முக்கியம் என்றும் அதேவேளையில், மாநிலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்களை ஆய்வு செய்து அதற்கான உரிய நடவடிக்கை நிதி ஆயோக் எடுக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் 8வது நிர்வாக மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேலும் கூட்டாட்சியை வலுவானதாக்க 'ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்ஸ் (ஏடிபி)' மற்றும் 'ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் (ஏபிபி)' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதி ஆயோக் அமைப்பு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் ஏற்படும் வலுவைப் பிரதிபலிப்பதாக இந்த இரண்டு திட்டங்களும் அமைந்துள்ளன. எனவே, நிதி ஆயோக் அமைப்புடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், மாநிலங்கள் இடையிலான உறவு, தூய்மை ஆகியவை குறித்தும் பிரதமர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, நிதி ஆயோக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் (டெல்லி), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா), நவீன் பட்நாயக் (ஒடிசா), நிதிஷ்குமார் (பீகார்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), மு.க.ஸ்டாலின் (தமிழ் நாடு), பினராயி விஜயன் (கேரளா), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), சித்தராமையா (கர்நாடகா) ஆகிய பத்து மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "நாட்டின் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த நோக்கம், கட்டமைப்பு மற்றும் அதற்கான வழியைத் தீர்மானிப்பதற்கான முக்கிய அமைப்பாக நிதி ஆயோக் விளங்குகிறது.
"இக்கூட்டத்தில் சுமார் 100 விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், 10 மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்கவில்லை. தங்கள் மாநிலங்களின் குரலை ஒலிக்க அவர்கள் தவறிவிட்டனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, பொறுப்பற்றது, மக்கள் விரோதமானது. நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் முதல்வர்களின் முடிவு முற்றிலும் பொறுப்பற்ற செயல்," என்று சாடியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், 'கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு கேலிக்கூத்தாக்குகிறது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் என்ன பயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.