புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தாங்கள் போராடிக்கொண்டிருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரை அணிவகுத்துச் செல்ல இருப்பதாக முன்பு அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் ஜந்தர்மந்தரிலிருந்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து மல்யுத்த வீரர்கள் சாலையில் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனையடுத்து புதிய நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரணியில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள், காவல்துறை தங்களைத் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். டெல்லி சிறப்புக் காவல் படையின் ஆணையர் திபேந்திர பதக், "நாங்கள் எங்கள் வீரர்களை மதிக்கிறோம். ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவுக்கு ஏற்படக்கூடிய தடையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்று கூறியுள்ளார்.

