பெங்களூரு: அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற 24 அமைச்சர்களும் தங்கள் வசம் எந்தெந்த துறையை நிர்வகிப்பார்கள் என்ற விவரத்தை முதல்வர் சித்தராமையா நேற்று வெளியிட்டார்.
அதன்படி, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித் துறையும் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு நீர்ப்பாசனத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதித்துறை, தொழிலாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், உளவுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்த்தொழில்நுட்பம் (ஐடி-பிடி), உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய முக்கியத் துறைகளை முதல்வர் சித்தராமையா தன்வசம் வைத்திருப்பார்.
துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பிற முக்கியத் துறைகளான பெரிய, சிறிய நீர்ப்பாசனம்; பெங்களூரு நகர மேம்பாடு, இந்நகரின் மற்றபிற குடிமை அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கர்நாடக அமைச்சரவை மே 27ஆம் தேதியன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிதாக 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அனைத்து அமைச்சர்களுக்கும் உரிய துறைகளை ஒதுக்கினார்.
ஏழுமுறை எம்.பி.யாகவும் இப்போது அமைச்சராகவும் இருக்கும் ஹெச்.கே.முனியப்பாவுக்கு உணவு, சிவில் சப்ளை, நுகர்வோர் விவகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு மூத்த அமைச்சரான கே.ஜி. ஜார்ஜுக்கு எரிசக்தித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எட்டுமுறை எம்எல்ஏவாகவும் தற்போது அமைச்சராக்கப்பட்டிருக்கும் ராமலிங்கரெட்டிக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

