ஸ்ரீஹரிகோட்டா: தரை, வான், கடல் வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'ஜி.எஸ்.எல்.வி' எஃப்12' உந்துகணை நேற்று காலை 10:42 மணிக்கு 'என்விஎஸ்-01' செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளம் வழி இந்த உந்துகணை விண்ணில் ஏவப்பட்டது.
இதன்மூலம் கடல்சார் இருப்பிடம், விவசாய நிலங்களைக் கண்டறிதல், பேரிடர் மேலாண்மை, கைப்பேசியில் உலவும் வசதி, அரசு நிறுவ\னங்கள், நிதி நிறுவனங்கள், மின்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்குத் தேவையான தரவுகளைப் பெறமுடியும் எனவும் கூறப்படுகிறது
இதில் 2,232 கிலோ எடை கொண்ட 'என்விஎஸ் 01' என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் அனுப்பப்பட்டு, புவிநிலைச் சுற்றுப்பாதையில் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"முதல்முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை செயற்கைக்கோள் கண்காணிக்கும்," என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.