மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மற்போர் வீராங்கனைகளைத் தரதரவென்று இழுத்துச்சென்று கைது செய்தது டெல்லி காவல்துறை.
மற்போர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, இந்திய மற்போர் சம்மேளனத் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மற்போர் வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாத காலமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி முன்னேறிய வீராங்கனைகளைக் காவலர்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிச்சென்று கைது செய்ததால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
ஒலிம்பிக், உலக மற்போர் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள சாக் ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் என 700 பேர் மீது டெல்லி காவலர்கள் எட்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
இதனிடையே நாட்டுக்குப் பெருமை சேர்த்த வீராங்கனைகளைக் கைது செய்ததை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.
"போராட்டம் நடத்திய வீரர், வீராங்கனைகளை இழுத்துச் சென்றும் தூக்கிச்சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல்நாளே வளைந்துவிட்டது," என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பிரிஜ்பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய ஏழு நாள்கள் எடுத்துக்கொண்ட டெல்லி காவலர்கள் அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 7 மணி நேரத்தைக்கூட எடுத்துக்கொள்ளவில்லை. இந்திய அரசு தனது விளையாட்டு வீரர்களை நடத்தும் விதத்தை இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது," எனப் பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கைது செய்யப்பட வேண்டிய பிரிஜ் பூஷண் சிங் புதிய நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதாகவும் தாங்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஆவேசமாகக் கூறினார்.
இந்திய மற்போர் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைதுசெய்யும்படி மற்போர் வீரர்கள் போராடிவரும் சூழலில், கோல்கத்தாவில் இந்திய மற்போர் வீராங்கனைகளை ஆதரித்து இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் செயல்பாட்டாளர்கள் முழக்கமிட்டனர்.
படம்: ஏஎஃப்பி

