கர்நாடகாவின் 24 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்களில் 24 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 32 அமைச்சர்களில் 31 பேர் செல்வந்தர்கள் எனவும் கூறப்படுகிறது.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரைத் தவிர்த்து அமைச்சரவையில் 32 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் லட்சுமி ஹெம்பல்கர் மட்டுமே பெண் உறுப்பினர். டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக மாற்றத்துக்கான அமைப்பு கர்நாடகத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு ஆய்வு செய்தது. அதுகுறித்த அறிக்கையை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு ரூ.1,413.80 கோடி சொத்துகள் உள்ளன. அமைச்சரவையில் இவருக்கு அதிக அளவில் சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மைசூர்: பேருந்து-கார் மோதல்
10 பேர் உயிரிழப்பு
மைசூர்: கர்நாடகாவின் சுற்றுலாத் தலமான மைசூருக்கு அருகே ஒரு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். அந்த கார் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் என்னுமிடத்தில் இருந்து மைசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையில் ஒரு திருப்பத்தில் எதிரே வந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் கார் நசுங்கி அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் பல்லாரியில் இருந்து கடந்த 27ஆம் தேதி மைசூருக்கு சுற்றுலா வந்துள்ளனர். ரயில் மூலம் மைசூருக்கு வந்த அவர்கள் வாடகைக் காரில் மைசூரின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்தனர். கடைசியாக சாமுண்டி மலையில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு, மைசூரு ரயில் நிலையத்திற்குச் செல்ல திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜம்மு: பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி
புதுடெல்லி: ஜம்முவின் ஜஜ்ஜார் கோட்லி என்னும் பகுதியில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தப் பேருந்து, "மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச்சென்றது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

