மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து உலக மல்யுத்த சம்மேளனம்
புதுடெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து அனைத்துலகப் போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீராங்கனைகள் நேற்று முன்தினம் அறிவித்தனர். பின்னர் விவசாயிகள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த முடிவை அவர்கள் கைவிட்டனர் எனக் கூறப்பட்டது. அத்துடன் பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ஐந்து நாள் கெடு விதித்துள்ளனர்.
இந்நிலையில் நீதி கேட்டு போராடி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக உலக மல்யுத்த சம்மேளனம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் பிரிஜ்பூஷண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பாரபட்சமின்றி முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், அந்த அமைப்பு, மல்யுத்த வீராங்கனைகளுக்கு எப்போதும் நாங்கள் துணைநிற்போம் என்று சூளுரைத்துள்ளது.
"இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விளையாட்டு அமைச்சு விதித்துள்ள 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனச் செயற்குழுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தவறினால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்துவிட்டு, இந்திய மல்யுத்த வீரர்கள் 'தனி' கொடியின் கீழ் போட்டிகளில் விளையாட உலக மல்யுத்த கூட்டமைப்பு வழிவகை செய்யும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம் என்றும் உலக மல்யுத்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பிரிஜ்பூஷணை பதவியில் இருந்து நீக்குவதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க அறுவர் கொண்ட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அனைத்துலக ஒலிம்பிக் சங்கம், மல்யுத்த வீராங்கனைகளிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

