கனமழை எதிரொலியால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை
புதுடெல்லி: டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை மழை காரணமாக வழக்கமான வெப்பநிலையைக் காட்டிலும் 6 டிகிரி செல்சியஸ் குறைவாகப் பதிவாகியுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக வாட்டி வதைத்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டனர். இப்போது குளிரும் மழையும் அவர்களை வாட்டிவதைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த மே 27ஆம் தேதி முதல் டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, காஜியாபாத், நொய்டா, பரீதாபாத், யமுனா நகர், குருசேத்திரா உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது.
மும்பை: 29 மாடிக் கட்டடத்தில் தீ
மும்பை: மேற்கு மும்பையின் காட்கோபார் எல்பிஎஸ் சாலைப் பகுதியில் உள்ள 29 மாடிக் கட்டிடத்தில் மே 30ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உயிர்ச்சேதம் ஏதுமில்லாமல் ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது. குடியிருப்பாளர்கள் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். எனினும், அந்தக் கட்டடத்தின் 15வது மாடியில் உள்ள சமையலறையில் இருந்து தீ பரவியதாக நம்பப்படுகிறது. இந்தத் தீச் சம்பவத்தால் கட்டடத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

