புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்துவரும் கலவரம் பற்றி விசாரிக்க ஆணையம் அமைக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
அந்த மாநிலத்தில் வசிக்கும் மேதேயி என்ற சமுதாய மக்கள் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3ஆம் தேதி பேரணி நடந்தது.
இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. ராணுவம் உள்ளிட்ட பல படையினரும் குவிக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாள்களுக்கு முன்னதாக மணிப்பூருக்குச் சென்றார். பல தரப்புகளோடு பலவற்றையும் ஆலோசித்தார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முழுமையாக விசாரணை நடக்கும்; மணிப்பூர் தொடர்பான ஆறு வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்;
மணிப்பூர் ஆளுநர் தலைமையில் அமைதிக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர், விசாரணை பாரபட்சம் இன்றி நடக்கும் என்றார்.