பாலேஸ்வர்: ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் மாவட்டம் அருகே தடம்புரண்ட ஹவ்ரா விைரவு ரயில் மீது அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 288 பேர் உயிரிழந்தனர்; 800க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இந்த விபத்து குறித்து விரிவான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளனர். அவர்களது வர்ணனை கேட்போரைக் கலங்கச் செய்வதாக உள்ளது.
"ஷாலிமாரில் இருந்து சென்னைக்குத் தூங்கியபடி சென்று கொண்டிருந்தேன். எப்படி ரயில் மோதியது என்றே தெரியவில்லை. விபத்து நடந்தபோது பலத்த சத்தம் கேட்டது. 'ஸ்லீப்பர்' பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
"ரயிலில் இருந்து கீழே இறங் கியபோது, எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். காப்பாற்றுங்கள், உதவுங்கள் என்று பலரும் கத்திக்கொண்டிருந்தனர். யாருக்காவது உதவலாம் என நினைப்பதற்குள், ரயிலின் உணவகம் தீப்பிடித்து எரிந்தது. அதனால் அங்கிருந்து நாங்கள் ஓடிவிட்டோம்," என்று தெரிவித்துள்ளார்.
அனுபவ் தாஸ் என்ற பயணி தனது டுவிட்டர் பதிவில், "சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது, குடும்பம் குடும்பமாக நசுக்கப்பட்டிருந்தனர். கைகால்கள் இல்லாத உடல்களைக் கண்டேன். நாலாபுறமும் இரத்தக்களரி. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இதை என் வாழ்நாளில் ஒரு நாளும் மறக்கமுடியாது," என்று நியூஸ் 18 ஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய மற்றொருவர், "விபத்தின்போது 10 முதல் 15 பேர் என் மீது சரிந்தனர். நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன். எனக்கு கையிலும் பின்னங்கழுத்திலும் பலத்த காயம் ஏற்பட்டது.
"எப்படியோ குவியலில் இருந்து மீண்டு வெளியில் வந்து பார்த்தபோது என்னைச்சுற்றி கை கால்கள் சிதைந்த நிலையில் கிடந்த உடல்கள், துண்டிக்கப்பட்ட கைகால்கள், சிதைந்த முகங்களுடன் உடல்கள் கிடந்தன," என அதிர்ச்சி விலகாமல் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக ஒடிசா தீயணைப்புத்துறை தலைவர் சுதான்ஷூ சாரங்கி தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தை நேரில் பார்த்த பஹானாகா கிராமவாசிகள் கூறுகையில், "இருளில் எங்களால் எதையும் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பலரும் உதவி கேட்டு கதறினர். சிலர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியிருந்தனர். எங்கும் ரத்தம் சிதறிக் கிடந்தது," என்று கூறியுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள், பயணிகள் அதிர்ச்சித் தகவல்

