பாலேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் பயணம் மேற்கொண்ட கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர்.
விபத்தில் சிக்கிய பெங்களூரு-ஹவுரா ரயிலில் சிக்மகளூரு, உத்தரகன்னடா உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 110 பேர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
கடந்த 31ஆம் தேதி, பெங்களூரு பையப்பனஹள்ளியில் உள்ள ரயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் நண்பகல் 12.30 மணிக்கு ஹவுரா ரயிலின் எஸ்5, எஸ்6, எஸ்7 ஆகிய மூன்று ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். இம்மூன்று பெட்டிகளும் ரயிலின் கடைசி பகுதியில் இருந்தன.
இந்நிலையில் அந்த ரயிலின் இன்ஜின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மாற்றம் செய்யப்பட்டதால், அக்குறிப்பிட்ட மூன்று பெட்டிகளும் முன்பகுதிக்குச் சென்றுவிட்டன. அதன் பிறகு ரயில் விபத்தில் சிக்கியபோது, கடைசிப் பகுதியில் இருந்த பெட்டிகள்தான் தடம் புரண்டன. அவற்றில் இருந்த பயணிகள் உயிரிழக்க நேரிட்டது.
கடவுள் அருளால் தாங்கள் உயிர் பிழைத்ததாக 110 பக்தர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் என அவர் தமது மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

