செய்திக்கொத்து

2 mins read
f63616cd-c3dc-43d3-b838-a106ae156db2
-

செர்பியா, சூரினாமுக்கு முர்மு பயணம்

புதுடெல்லி: ஆறு நாள் அதிகாரத்துவப் பயணமாக செர்பியா, சூரினாம் நாடுகளுக்கு சென்றுள்ளார் அதிபர் திரவுபதி முர்மு. இந்திய அதிபராக ஐரோப்பாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சூரினாம் நாட்டில் இந்தியர்கள் குடியேறி, 150 ஆண்டுகள் ஆனதையொட்டி, அங்கு நடைபெறும் விழாவில் அதிபர் முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அந்த வகையில் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

துபாய்க்கு பயணிகள் கப்பல் சேவை

திருவனந்தபுரம்: கேரளா, துபாய்க்கு இடையே பயணிகள் கப்பலை இயக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கேரள அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கேரள மக்களின் வசதியைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் பரிசீலிக்கப்படுவதாக அம்மாநிலத்தின் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரிவித்துள்ளார். "கேரளாவில் பேபூர் துறைமுகத்துக்கும் துபாய்க்கும் இடையே உள்ள கடற்பகுதி சுமார் நான்காயிரம் கிலோ மீட்டர் தூரமாகும். 35 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் பயணிகள் கப்பல் துபாய் சென்று சேர மூன்றரை நாள்கள் ஆகும். இதற்கான கட்டணம் அதிகபட்சம் ரூ.15 ஆயிரமாக இருக்கும்," என்றார் அமைச்சர் அகமது.

பெற்றோரை இழந்த சிறார்களின் கல்விச் செலவை ஏற்கும் அதானி

மும்பை: ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறார்களின் பள்ளிக் கல்விச் செலவை அதானி குழுமம் ஏற்கும் என தொழிலதிபர் கௌதம் அதானி அறிவித்துள் ளார். ரயில் விபத்தால் துயரத்தில் மூழ்க்கி உள்ளதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத் தாருக்கும் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவ்விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் அதானி மேலும் கூறியுள்ளார்.

கோவில் உண்டியல் பணம் திருட்டு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரிபசவேஸ்வரர் கோவிலில் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவில் பூட்டை உடைத்து, திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். உண்டியலில் ரூ.70,000 இருந்திருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.