புதுடெல்லி: இந்தியாவின் கடற்படையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆறு நீர்மூழ்கிக்கப்பல்களைக் கட்டுவதற்கு ஜெர்மனியுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு நேற்று புதுடெல்லி வந்துசேர்ந்தார். அவருக்கு அங்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிட்டத்தட்ட US$5.2 மதிப்புள்ள கப்பல் கட்டும் திட்டத்தை ஜெர்மனியின் திஸ்ஸென்க்ரூப் நிறுவனமும் இந்தியாவின் மஸகோன் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஏஆர்டி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த திரு பிஸ்டோரியஸ், "புதன்கிழமையன்று மும்பையில் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவது அன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
"தன்னுடன் வருகை தந்துள்ள ஜெர்மன் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதும் உதவுவதுமே எனது பங்காக இருக்கும்," என்று கூறினார்.
"ஜெர்மனியின் தொழிற்துறைகளுக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான கொள்கை ரீதியிலான பங்காளித்துவம் மேலும் வலுவடைந்துள்ளது," என்று திரு போரிஸ் தெரிவித்துள்ளார்.

