புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த நடுவர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மல்யுத்த நடுவரான ஜக்பீர் சிங் தெரிவித்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிஜ் பூஷன் சரண் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் என ஜக்பீர் சிங் கூறியுள்ளார். இதனால் பிரிஜ் பூஷன் சரணுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள ஜக்பீர் சிங், கடந்த காலங்களில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பிரிஜ் பூஷன் சிங், பல்வேறு தருணங்களில் தகாத முறையில் நடந்து கொண்டது உண்மைதான் என்று தெரிவித்ததாக ஊடகச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ நகரில் ஆசிய அளவிலான மல்யுத்த போட்டியின்போது, பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றன. அப்போது பிரிஜ் பூஷன் ஒரு வீராங்கனையிடம் தகாதமுறையில் நடந்து கொண்டார்.
"புகைப்படம் ்எடுக்கும் நிகழ்வின்போதும் ஒரு வீராங்கனையிடம் அவர் அத்துமீறினார். அப்போது அந்த வீராங்கனை அவரது கையைத் தட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பெண்ணுக்கு விரும்பத்தகாத செயல் ஏதோ ஒன்று நடந்துள்ளது," என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், 2013ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியின்போது, தங்குவிடுதியில் இளம் வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷனின் நண்பர்கள் சிலர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாகவும் ஜக்பீர் சிங் கூறியுள்ளார்.
இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் ஆசிய விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிக்க வீரர் கள் முடிவு செய்துள்ளனர்.

