செய்திக்கொத்து

2 mins read
aeb2b4e7-5fed-4fdd-8d8c-043009f1083d
-

குப்பை: துப்பு தந்தால் ரூ.2,500

திருவனந்தபுரம்: கேரள அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், "குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது காணொளி ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2,500 வரை, தகவல் தருபவருக்கு சன்மானமாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மின்னஞ் சல் முகவரி ஆகியன அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரைக் காத்த பெண் காவலர்

வாரங்கல்: தெலுங்கானாவில் ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அவரை அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் உடனடியாகச் செயல் பட்டுக் காப்பாற்றினார். வாரங்கல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இச்சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர் பான காணொளியை ரயில்வே பாதுகாப்புப் படை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது. ஓடும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயன்றபோது திடீரென கீழே விழுந்தார். அப்போது நடைமேடையில் நின்றிருந்த ரயில்வே பெண் காவலர் சோனாலி வேகமாகச் செயல் பட்டு தண்டவாளத்தில் விழாமல் இழுத்து அப்பெண்ணை காப்பாற்றியது காணொளியில் பதிவாகியிருந்தது.

திருமணத்தில் உலக சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரனில் கடந்த மே 26ஆம் தேதி 2,413 ஜோடிகள் அடுத்தடுத்து மணம் முடித்துக் கொண்டனர். இது 12 மணி நேரத்தில் செய்யப்பட்ட அதிக திருமணங்கள் என்று கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது. 2013ஆம் ஆண்டு ஏமனில் 24 மணி நேரத்தில் 963 ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.