சோனிபட்: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று மல்யுத்த வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ளன. அதில் மல்யுத்த வீரர்கள் பங்கேற்காவிட்டால் இந்திய அணிக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகட் தங்கப் பதக்கம் வென்று சாதித்தனர்.
புகாரில் சிக்கியுள்ள பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக வரும் வியாழக்கிழமைக்குள் (ஜூன்15) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததால், மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உறுதி அளித்தபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் போராட்டத்தை தொடரப் போவதாகவும் ஆசிய விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிக்கப்போவதாகவும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக பிரிஜ்பூஷன் மீது புகார் அளித்த 18 வயதுக்குட்பட்ட வீராங்கனையின் தந்தை, தாங்கள் கொடுத்தது பொய்ப் புகார் என பல்டி அடித்துள்ளார்.
இந்த நிலையில் அரியானாவின் சோனிபட்டில் நடந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர்கள் மிரட்டப்படுவதாகவும் அதனால்தான் அந்த சிறுமியின் தந்தை பல்டி அடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர்களை பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிவு 161 மற்றும் 164ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் மாற்றப்பட்டுள்ளன.
"நடப்பவற்றை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை," என குற்றம் சாட்டினார்.
லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு போராட்டத்தை முடிக்குமாறு பஜ்ரங் பூனியாவுக்கு அழைப்புகள் வருவதாக குற்றம் சாட்டிய சாக்ஷி மாலிக், இதனால்தான் பிரிஜ்பூஷனை முதலில் கைது செய்துவிட்டு விசாரணையை நடத்துமாறு கோரி வருகிறோம் என்றும் கூறினார்.

