கலவரத் தூண்டலை முறியடிக்க மணிப்பூரில் இணையச் சேவை தொடர்ந்து முடக்கம்
இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதத் தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
கலவரம் அடங்காததால், இணையச் சேவைக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பேச்சுகளைப் பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் இணையச் சேவைத் தடையை நாளை மறுதினம் (ஜூன் 15) வரை நீட்டிக்கப்படுவதாக மணிப்பூர் அரசு தெரிவித்து உள்ளது.
இம்மாதம் 3ஆம் தேதி முதல் மணிப்பூரில் இணையச் சேவை நடைபெறவில்லை.
இந்த நிலையில், மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன், இம்பாலில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
"மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதங்களைத் தேடும் பணி நடக்கிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் 53 ஆயுதங்களும் 39 வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. கலவரத்தால் 50,698 பேர் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மணிப்பூர் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வைத் தடுக்க விலைக்கட்டுப்பாட்டு வழிமுறை பின்பற்றப்படுகிறது. மாநிலத்துக்கு தேசிய நெடுஞ்சாலை 7 வழியாக பல்வேறு பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன. 35,000 டன் கட்டுமானப் பொருள்கள், எரிபொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் 2,376 லாரிகளில் கொண்டு வரப்பட்டுள்ளன," என கூறப்பட்டுள்ளது.

