ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இவ்வாண்டு இறுதியில் இந்த மாநில சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் இப்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி (படம்) நேற்று ஜபல்பூரில் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், "மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்கத் தவறிவிட்டது.
"கடந்த மூன்றாண்டுகளில், பாஜக அரசாங்கத்தால், மாநிலத்தில் 21 அரசு வேலைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் 220 மாத ஆட்சியில் 225 மோசடிகள் நடந்துள்ளன. இந்த எண்ணிக்கை எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, எனது அலுவலகத்தில் இதனை 3 முறை சரிபார்த்த பிறகு, இது உண்மைதான் என கண்டறிந்தேன்.
"இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மக்கள் தேர்தலில் பாஜகவிற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்," என்று பிரியங்கா காந்தி பேசினார்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த வேளையில் 2020 மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் எம்எல்ஏக்கள் சிலர் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் ஆனார்.

