புதுடெல்லி: டெல்லியில் அதிகாரிகளை நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
அந்தத் தீர்ப்பை செல்லுபடியாகாத வகையில் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இதற்கான மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லி ராமலீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்தினம் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தியது.
அந்தக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், "அவசரச் சட்டம் மூலம் பிரதமர் மோடியின் முதல் தாக்குதல் டெல்லியில் நடந்துள்ளது.
"டெல்லியில் இனி சர்வாதிகார ஆட்சிதான். ஆளுநர்தான் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர். தேர்தலில் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால் மத்திய அரசுதான் டெல்லியை ஆட்சி செய்யும் என அச்சட்டம் கூறுகிறது. இதை எதிர்க்காவிட்டால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களிலும் இத்தகைய அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்து விடுவார்கள்," என்றார் கெஜ்ரிவால்.

