செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a33484ed-ff75-4fc8-ae6d-7ae2523cf6c7
-

மம்தாவுக்கு 600 கிலோ மாம்பழம்: பங்ளாதேஷ் பிரதமர் அனுப்பினார்

டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 600 கிலோ மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி உள்ளார்.

அரசதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர், லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்களை மம்தா பானர்ஜிக்கு தங்கள் பிரதமர் அனுப்பியுள்ளதாக பங்ளாதேஷ் அதிகாரி கூறினார். பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தார்.

வடகிழக்கு மாநில முதல்வர்கள் அனைவருக்கும் அவர் மாம்பழங்களை அனுப்பி உள்ளார்.

ஒடிசா விபத்து: பலி 289 ஆனது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. அந்தக் கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்க ளுடன் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், பகனகா பஜார் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரைச் சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.

நிறுத்தப்பட்டது போராட்டம்

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. மலர்களைக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரினர். ஆனால், அரசாங்கம் இதற்கு மறுத்து வந்தது. அரசின் முடிவைக் கண்டித்து, குருக்ஷேத்திரத்தில் டெல்லி-அமிர்தசரஸ் நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றதையொட்டி போராட்டம் கைவிடப்பட்டது.