புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக வரும் 21ஆம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜூன் 22ஆம் தேதி பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க நாடாளு மன்றக் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை இந்தியா வந்த அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான், பிரதமர் மோடியைப் புதுடெல்லியில் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்கப் பேராளர் கூறினார்.
இந்தியப் பிரதமர் மோடியை வரவேற்று பேச்சு நடத்த அெமரிக்க அதிபர் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று திரு ஜேக் சுல்லிவான் இந்தியப் பிரதமரிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் கூறியது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பரந்த, உலக உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு விரிவடைந்து வருவது குறித்து இந்தியப் பிரதமர் மனநிறைவு தெரிவித்ததாகவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.
அமெரிக்கப் பயணத்தின்போது அதிபர் பைடனுடன் இரு தரப்புப் பேச்சு நடத்த தான் ஆர்வத்துடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் அமெரிக்கப் பேராளரிடம் தெரிவித்தார்.
"அமெரிக்கப் பயணம் ஆக்ககரமானதாக இருக்கும். பரஸ்பர நன்மைகளுக்கான இரு தரப்பு வட்டார, உலகப் பிரச்சினைகள் பற்றி அமெரிக்க அதிபருடன் பேச ஆர்வத்துடன் இருக்கிறேன்," என்று அமெரிக்க தற்காப்பு ஆலோசகரிடம் திரு மோடி கூறினார்.
இதனிடையே, இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தற்காப்பு அமைச்சு, இந்த மாத இறுதியில் இந்தியப் பிரதமர் மோடியின் வாஷிங்டன் வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும் என தெரிவித்தது.
இதுபற்றி கருத்து கூறிய தற்காப்பு அமைச்சின் துணைச் செயலாளர் இலே ரேட்னர், இரு நாடுகளின் உறவுகளில் புதிய அத்தியாயங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
"பிரதமர் மோடியின் வருகை இந்திய, அமெரிக்க உறவில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும். இந்தியப் பெருங்கடல், பசிபிக்கடல் பகுதியில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
"அந்தக் கடல் பகுதியில் சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன," என்றாரவர்.
அமெரிக்கப் பேராளரும் அவரின் இந்திய சகாவான அஜித் தோவலும் புதுடெல்லியில் அதி முக்கிய புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.
இந்தியப் பிரதமர் அதிகாரபூர்வ அமெரிக்கப் பயணம்

