புதுடெல்லி: இந்தியாவில் ஏழு அணு மின்சக்தி ஆலைகள் செயல்பட உள்ள பகுதிகளில் பேரிடர் தவிர்ப்புத் திட்டங்களை ஆயத்தப்படுத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் சேர்ந்து வழிகாட்டித் திட்டத்தை உருவாக்குமாறு அவர் மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் அமித் ஷா தலைமையில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
அதில் பேசிய அமைச்சர், மாநிலங்கள் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரிக்க உதவியாக மத்திய அரசு ரூ.8,000 கோடி ஒதுக்கி இருப்பதாகக் கூறினார். இந்த நிதி மூன்று முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களின் தீயணைப்புத் துறையின் சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, கோல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் புனே ஆகிய பெருநகரங்களில் வெள்ள அபாயத்தைக் குறைக்க ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க 17 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் ரூ.825 கோடி மதிப்பீட்டில் தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
ஏழு அணுமின் நிலையங்கள் கட்டப்படும் மாநிலங்களைப் பார்வையிட்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் அந்த இடங்களில் பேரிடர் சம்பவங்களைத் தடுக்க கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என பரிந்துரைத்துள்ளதை அவர் சுட்டினார்.

