அதிக பணக்காரர்கள் வெளியேறும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம்
புதுடெல்லி: இந்தியா இந்த ஆண்டில் 6,500 செல்வந்தர்களை இழந்துவிடும் என்று ஹென்லி பிரைவேட் மைகிரேஷன் என்ற நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அளவுக்குச் செல்வந்தர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியாவைவிட்டு 2022ல் 7,500 செல்வந்தர்கள் வெளியேறுவர் என்று சென்ற ஆண்டில் அந்த அறிக்கை கணித்து இருந்தது.
இரு ஆண்டுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியா வைவிட்டுச் செல்லும் செல்வந்தர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
சீனாவில் இருந்து 13,500 பணக்காரர்கள் வெளியேறிவிடுவர். பிரிட்டனில் இருந்து 3,200 பேர் வேறு நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அப்படி வெளியேறும் செல்வந்தர்கள் துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளை நாடுகிறார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
குறைந்தபட்சம் US$1 மில்லியன் (ஏறக்குறைய ரூ.8.2 கோடி) அல்லது அதற்கும் அதிக முதலீட்டுச் செல்வத்தைக் கொண்டிருப்போரை அறிக்கை செல்வந்தர்கள் என்கிறது.
இந்தியாவில் வரி அமைப்பு முறை, பணத்தை நாட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கான சிக்கலான விதிமுறைகள் முதலானவை தாங்கள் வெளியேறுவதற்கான காரணங்களில் சிலவாகும் என்று இந்திய செல்வந்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தினர் வேறு நாடு களுக்கு இடம்மாறுவது வழக்கம் என்பதை அறிக்கை சுட்டியது.
அத்தகைய செல்வந்தர்கள் இடம் மாறுவதை வைத்து ஒரு நாட்டின் பொருளியல் வாய்ப்புகளையும் எதிர்காலப் போக்குகளையும் ஓரளவுக்குக் கணித்துவிட முடியும் என்று ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்டீபன் தெரிவித்தார்.
சீனாவைவிட்டு வெளியேறும் செல்வந்தர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று ஆய்வு கூறுகிறது.
உலக நிலவரப்படி, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் முறையே 122,000 மற்றும் 128,000 செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
உலகளவில் கடந்த 10 ஆண்டு காலத்தில் செல்வந்தர்கள் இடம்பெயர்வது படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதாக ஹென்லி அறிக்கை தெரிவிக்கிறது.
உலகில் செல்வந்தர்களை அதிகமாக இழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை கூறியது.

