புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் நேற்று தாமதமாக இரவில் கரையைக் கடக்க இருந்தது.
என்றாலும் முன்னதாகவே நேற்று மாலையில் குஜராத் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பேய் மழை பெய்தது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று முன்னதாக எச்சரிக்கப்பட்டு இருந்தது.
புயல் நேற்று மாலை கரை யைக் கடக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் கரையேற தாமதம் அடையலாம் என்று நேற்று மாலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து இருந்தன.
பிரதமர் மோடி தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்து தீவிரமான ஆலோசனைகள் இடம்பெற்றன. அதனையடுத்து புயல் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து சுமார் 100,000 பேர் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தேசிய மாநில மீட்புக் குழுவினரோடு ராணுவமும் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட ரயில் சேவைகளை முன்னதாக நிறுத்திவிட்டது. பிபர்ஜாய் என்றால் வங்காள மொழியில் பேரிடர் என்று பொருள்.
குஜராத்துக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட 325 கி.மீ. கடலோரப் பகுதியை புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாக கணித்து இருந்தது.
அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் 1,000 கர்ப்பிணிகளும் 9,000 பிள்ளைகளும் அடங்குவர். புயல் வீசுவதற்கு முன்னதாகவே கர்ப்பிணிகளில் 300 பேருக்கு பிரசவம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.