கோல்கத்தா: இந்தியா-மியன்மார்-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் அமைத்து முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேற்குவங்காளத் தலைநகர் கோல்கத்தாவில் இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) இந்திய வெளியுறவு அமைச்சு ஆதரவுடன் வணிக மாநாட்டை நடத்தியது.
தாய்லாந்து, மியன்மார் நாடுகளின் அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர்.
இந்தியா-மியன்மார்-தாய்லாந்தை இணைக்கும் முத்தரப்பு தேசிய நெடுஞ்சாலை குறித்து அப்போது பேசப்பட்டது. தாய்லாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பல விவரங்களைத் தெரிவித்தார்.
அந்த 2,800 கி.மீ. நெடுஞ்சாலை தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் தொடங்கி இந்தியாவின் கோல்காத்தாவில் முடிவடையும்.
அதில் 2,500 கி.மீ. இந்தியாவிலும் மியன்மாரிலும் அமையும். சாலையின் எஞ்சிய குறைந்த பகுதியே தாய்லாந்தில் அமைகிறது.
தாய்லாந்தில் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. இந்தத் திட்டம் முழுமை பெற இந்தியா, மியன்மாரில் சாலைப் பணிகள் முடிவடைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய மியன்மார் வர்த்தக அமைச்சர் இந்த நெடுஞ்சாலை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தயாராகிவிடும் என்றார்.

