புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓஸ்வால் குழுமத்தின் சுவிட்சர்லாந்து பில்லியனர் தம்பதிகளான பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால், சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1649 கோடி) மதிப்புள்ள 'வில்லா வாரி' மாளிகையை வாங்கியுள்ளனர்.
ஓஸ்வால்களின் மகள்களான வசுந்திரா மற்றும் ரிடி ஆகியோரின் பெயரிடப்பட்ட ஆடம்பரமான வில்லா, சுவிட்சர்லாந்தின் ஜிங்கின்ஸ் கிராமத்தில் அமைந்துள்ளது, இது உலகின் மிக விலையுயர்ந்த பத்து வில்லாக்களில் ஒன்றாகும்.
உலகப் புகழ்பெற்ற உள் அலங்கார வடிவமைப்பாளரான ஜெஃப்ரி வில்கெஸால் வடிவமைத்துள்ள வில்லா வேரி 40,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் மோன்ட் பிளாங்கை நோக்கி அமைந்துள்ளது. ஓஸ்வால்களின் வியாபார மதிப்பு மூன்று பில்லியன் டாலராகும். சொத்து வியாபாரம், சுரங்கம் மற்றும் உரங்கள் உட்பட பலவிதமான தொழில்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மகள்களில் ஒருவரான வசுந்திரா, நிதித்துறையில் முக்கியப் பட்டம் பெற்றவர் மற்றும் ஓஸ்வால் இண்டஸ்டிரிஸின் ஒரு பகுதியான பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆக்சிஸ் மினரல்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
இளைய மகள் ரிடி, லண்டன் பல்கலைக் கழகத்தில் ரசாயனப் பொறியியல் படிக்கிறார், மேலும் இந்தோ-மேற்கத்திய பாப் பாடக ராகவும் பாடலாசிரியராகவும் உருவாகி வருகிறார்.
பல்வேறு தொழில்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தபோதிலும், ஓஸ்வால் குடும்பம் தங்களை வெளிக்காட்டிக்கொள் வதில்லை. உலகில் அதிக திரவ அம்மோனியாவை உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியாவில் உள்ள புரப் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம் அவர்களுக்குச் சொந்தமானது. இது மட்டுமல்லாமல் பல பெரிய தொழில்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.
இரு மகள்களும் தங்களுடைய வேலைச் சுமைகளுக்கு இடையே இயற்கைப் பாதுகாப்பு மற்றும் கலைத்திறன் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

