வடஇந்தியாவில் கடும் வெப்பம்: 100 பேர் பலி

வடஇந்தியாவில் கடும் வெப்பம்: 100 பேர் பலி

18 Jun 2023 - 10:28 pm

2 mins read

புதுடெல்லி: வடஇந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மட்டும் வெப்பத் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த மூன்று நாள்களில் குறைந்தது 100 பேர் மாண்டுவிட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் பால்யா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக 400 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே கூறியது.

அந்த நோயாளிகளில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.

பெரும்பாலானவர்கள் மாரடைப்பு, மூளை வாதம், வயிற்றுப்போக்கு காரணமாக மரணமடைந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, அதிகமானோர் மரணமடைந்துவிட்டது பற்றி விசாரிப்பதற்காக லக்னோவிலிருந்து மருத்துவக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் கடும் வெப்பம் நிலவுவதால் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஏராளமான காற்றோட்டச் சாதனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதிக நோயாளிகள் வந்துகொண்டு இருப்பதால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தோதாக மருத்துவமனைகளில் மருத்துவர்களும் தாதியரும் அதிகமாக்கப்பட்டு வருகிறார்கள் என்று திவாகர் என்ற மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

பீகாரில் மட்டும் கடந்த ஒரே நாளில் 44 பேர் மாண்டுவிட்டனர்.

பாட்னா நகரில் மட்டுமே 35 பேர் மரணமடைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் பால்யாவில் மிகக் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.

பீகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் ஜூன் 19ஆம் தேதியன்றும் கடும் வெப்பநிலை நிலவும் என்றும் தேவையின்றி வெய்யிலில் வெளியே செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அபாய அறிவிப்பு விடுத்து பொதுமக்களை, குறிப்பாக முதியோரை எச்சரித்தது.