திஸ்பூர்: வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 13 மாவட்டங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இதன்காரணமாக 38,000 பேருக்கும் மேலானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக அசாம் மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஏஎஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது.
அசாமில் மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக பிஸ்வநாத், தர்ராங், லக்கிம்பூர், தாமல்பூர், உதல்குரி, திப்ரூகர், ஹோஜாய், நாகோன், சோனிட்பூர், டின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாம் முழுவதும் 77 கிராமங்களில் ஏறக்குறைய 210 ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சார இணைப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கவுகாத்தியில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டம் உயரத் துவங்கி உள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல ஆறுகளில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக ஓடுகிறது.
கவுகாத்தி நகரில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். அந்த நகரில் 360 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அசாம் குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படம்: இந்திய ஊடகம்

