அகமதாபாத்: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியிடம் சமரசத் தீர்வு காணும்படி குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இதனை சமரசமாக முடித்து வைக்க விரும்பியதாக நீதிபதி விளக்கம் கூறியுள்ளார்.
வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் ஏழு மாதக் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சமீர் தவே, ''பழங்காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைப்பார்கள். அப்போது 17 வயதிலேயே முதல் குழந்தை பெற்றெடுப்பது சர்வ சாதா ரணம். எனவே, இவ்விஷயத்தில் குற்றவாளியுடன் சமரசம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயவேண்டும்,'' என்றார்.
இந்நிலையில், சிறுமியை வன்கொடுமை செய்த 23 வயது வாலிபர் நேரில் முன்னிலையாகி கூறுகையில், ''எனக்கு இரண்டாண்டுக்கு முன்பே திருமணமாகிவிட்டது. என் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளதால் சமரசத்திற்கு வாய்ப்பில்லை," என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

