வங்கிக் கணக்குகளுக்குப் பெயரைப் பயன்படுத்தும் புதுமை
புதுடெல்லி: வாடிக்கையாளா்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கணக்கு எண்களுக்குப் (அக்கவுன்ட் நம்பா்) பதிலாக அவா்கள் விரும்பும் பெயரைப் பயன்படுத்தும் புதுமையான திட்டத்தை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. 'என் கணக்கு, எனது பெயா்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ், வாடிக்கையாளா் தோ்வு செய்யும் பெயரைப் பயன்படுத்தியே பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவோ, பிறரிடமிருந்து பணம் பெறவோ முடியும்.
24 மணி நேரத்தில் ஐந்து நிலநடுக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டம், லடாக்கின் லே பகுதி, தோடா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா அருகே நேற்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவானது.
'சக்கர நாற்காலி இல்லாததே காரணம்'
கோட்டா: காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த தனது மகனை ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையின் மின்தூக்கிக்குள் ஸ்கூட்டர் வாகனத்தில் மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர் அழைத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால், தான் இவ்வாறு செய்ததாக மனோஜ் ஜெயின் விளக்கம் கூறியுள்ளார்.

