ரூ.8.5 கோடி கொள்ளை: பத்து ரூபாய் குளிர்பானத்தால் சிக்கிய தம்பதி

ரூ.8.5 கோடி கொள்ளை: பத்து ரூபாய் குளிர்பானத்தால் சிக்கிய தம்பதி

2 mins read
8d133872-7f20-403e-a0ef-5156dade3533
மந்தீப் கவுரும் அவரின் கணவர் ஜஸ்விந்தர் சிங்கும். - படங்கள்: இந்திய ஊடகம்

லூதியானா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் எட்டரைக் கோடி ரூபாயைக் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய தம்பதி பத்து ரூபாய் குளிர்பானத்தால் சிக்கினர்.

மந்தீப் கவுர் என்ற பெண் உள்ளிட்ட சிலர் இம்மாதம் 10ஆம் தேதி, ‘சிஎம்எஸ்’ நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.8 கோடியே 49 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அக்கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர்.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம், சமோலியில் உள்ள ஒரு சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் மந்தீப் கவுரும் அவரின் கணவர் ஜஸ்விந்தர் சிங்கும் பிடிபட்டனர்.

வெற்றிகரமாகக் கொள்ளையை அரங்கேற்றியதற்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர்கள் அந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய கௌரவ் என்பவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

வழக்கில் தொடர்புடைய 12 பேரில் ஒன்பது பேர் பிடிபட்டுவிட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தம் கணவர் ஜஸ்விந்தரோடு நேப்பாளத்திற்குத் தப்பிச் செல்ல மந்தீப் கவுர் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. ஆனால், அதற்குமுன் ஹரித்துவார், கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

அவ்வகையில், உத்தராகண்டிலுள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான ஹேம்குந்த் சாகேப்பிற்கு அவர்கள் சென்றனர். ஆயினும், பக்தர்கள் கூட்டம் மிகுதியாக இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.

எனவே, பக்தர்களுக்கு இலவச குளிர்பானம் வழங்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதனைப் பெறுவதற்காக மந்தீப்பும் ஜஸ்விந்தரும் வரிசையில் நின்றனர். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கள் முகத்தை மூடியிருந்தனர்.

ஆயினும், குளிர்பானம் வாங்கியபின் அதனை அருந்துவதற்காக முகத்திரையை அகற்றியபோது, காவல்துறையினர் அவர்களை அடையாளம் கண்டனர். இருப்பினும், அவர்களை உடனடியாகக் கைதுசெய்யாமல் அவர்கள் வழிபாட்டை முடித்த பிறகு கைதுசெய்தனர்.

இந்த நடவடிக்கைக்கு ‘ராணித் தேனீயைப் பிடிப்போம்’ என்று காவல்துறை பெயரிட்டிருந்தது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்குமுன் மந்தீப் பல வங்கிகளில் கடன்பெற்றதாகவும் அதற்குமுன் காப்புறுதி முகவராகப் பணியாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு பிப்ரவரியில்தான் மந்தீப்பிற்கும் ஜஸ்விந்தருக்கும் திருமணம் நடந்தது. விரைவில் பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்