‘காஷ்மீரில் பிரிவினைவாதம் இல்லை; இயல்புநிலைக்குப் பேச்சுவார்த்தை உதவும்’

‘காஷ்மீரில் பிரிவினைவாதம் இல்லை; இயல்புநிலைக்குப் பேச்சுவார்த்தை உதவும்’

2 mins read
53e12f71-ec1c-4003-81fb-df7234fd98fc
காஷ்மீர் பெண் ஒருவர் வயல்வெளியில் வேலை பார்க்கிறார். - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீநகர்: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில், காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தவர் ஏ.எஸ்.துலத். உளவுத்துறை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். காஷ்மீர் நிலவரம் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

காஷ்மீரில் தற்போது பிரிவினைவாதம் இல்லை. அது வேண்டாத ஒன்றாகிவிட்டது. 370வது சட்டப்பிரிவு போல, பிரிவினைவாதமும் மறைந்து விட்டது. அங்கு இயல்பு நிலை திரும்ப முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது.

ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் உள்ளார். அவருக்கு காஷ்மீர் அரசியலில் பங்கு உள்ளது. அதனால் காஷ்மீர் பிரச்சினை பற்றிப் பேச, அவர் விரைவில் வீட்டுக் காவலில் இருந்து வெளியே வர அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவரது நிலைப்பாட்டை அறிய முடியும்.

காஷ்மீரில் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைத்தால், அது மத்திய அரசுக்கு நல்லதாக அமையும். இதற்கு பேச்சுவார்த்தை ஒன்றுதான் தீர்வு. பிரிவினைவாதிகளுடன் பேச வேண்டாம் என்றால், முக்கிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை நடத்தலாம். அப்போதுதான் அங்கு மாநில ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த முடியும்.

பாகிஸ்தானில் தற்போது நிலவும் நிலைமை, காஷ்மீரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களே, பாகிஸ்தானில் என்ன இருக்கிறது என இப்போது கூறுகிறார்கள். ஆனால், ஜம்மு காஷ்மீரை விட்டு தீவிரவாதம் போகவில்லை என்பது அடிக்கடி நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. பூஞ்ச்-ரஜோரி ஆகிய பகுதிகளில் நடந்த மோசமான சம்பவங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காஷ்மீர் இளைஞர்கள் அவ்வப்போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். அங்கு பதற்றமான சூழல் நிலவ வேண்டும் என எவரும் விரும்பவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டு பிடிபி கட்சி நிறுவனர் முஃப்தி முகமது சயீத்தை ஜம்மு காஷ்மீர் முதல்வராக தொடர, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு அனுமதிக்காதது மிகப் பெரிய தவறு. முஃப்தி முகமது சயீத் கடந்த 2002-ம் ஆண்டு முதல்வரானார். அவரது 3 ஆண்டு ஆட்சி மிக நன்றாக இருந்தது. அவரை அகற்றியது, காங்கிரஸ் கட்சி செய்த தவறு. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதுதான் அரசியல். இது குறித்து அதிகாரத்தில் இருக்கும் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.

காஷ்மீர் பேச்சுவார்த்தையின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என தெரியவில்லை. ஏனென்றால், மத்திய அரசிடமிருந்து நீண்டகாலத்துக்கு முன்பே விலகிவிட்டதால், அது பற்றி எனக்கு தெரியாது. காஷ்மீர் பிரச்சினையை ஒவ்வொரு அரசும் தனது சொந்த வழியில் கையாள்கிறது.

இவ்வாறு திரு ஏ.எஸ்.துலத் தமது பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்